ஆனைமலை: 'விளை பயிர்கள் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பிடிக்க வேண்டும்,' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனைமலையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று பேசினர். விவசாயிகள் பேசியதாவது: விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து விளைபயிர்களை சேதப்படுத்துகின்றன. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். ஊராட்சிகளில், கழிவு, இறைச்சி, உணவுகளை திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. மேலும், புதர்களும் இருப்பதால், அங்கேயும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க கழிவுகளை கொட்டுவதையும், புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுபன்றிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும், உரிய நிவாரணம் விரைந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பேசினர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காட்டுப்பன்றிகளை பிடிப்பது குறித்து, வனத்துறை சார்பில் கடந்த ஜன., மாதம் புதிய சட்ட விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. வனப்பகுதியையொட்டி ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகளை, வனத்துக்குள் விரட்ட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் இரண்டு கி.மீ.,க்குள் இருந்தால், காட்டுப்பன்றியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கவும்; மூன்று கி.மீ., துாரத்துக்கு மேல் காட்டுப்பன்றிகள் இருந்தால், பிடித்து வனத்தில் விடலாம்; விரட்டி விடலாம். அல்லது கமிட்டி வாயிலாக ஒப்புதல் பெற்று சுட்டு பிடிக்க அனுமதி உள்ளது. காட்டுபன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் திறந்தவெளியில் கழிவு கொட்டும் பிரச்னை குறித்து அந்த துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.