உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுண்டானாக்களில் அடையாள சின்னங்கள் என்னாச்சு! முன்மாதிரியானது திருவள்ளுவர் திடல்

ரவுண்டானாக்களில் அடையாள சின்னங்கள் என்னாச்சு! முன்மாதிரியானது திருவள்ளுவர் திடல்

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் ரவுண்டானாவில், ஐந்து அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளதை போன்று, மற்ற ரவுண்டானாக்களிலும் பொள்ளாச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அடையாளங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோடு விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அரசு, 34.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து,நிலங்கள் கையகப்படுத்தி, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டன. ரோடு விரிவாக்கத்துக்காக மின்மாற்றிகள், கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.தொடர்ந்து, தேர்நிலையம், தபால் அலுவலகம், காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், சிக்னலுக்கு பதிலாக, ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன.இந்த ரவுண்டானாக்கள் அமைக்கும் போது, பொள்ளாச்சியின் அடையாளம், பாரம்பரியத்தை போற்றும் வகையில், சிலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்பின், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. ரவுண்டானாக்களில் வழக்கம் போல போலீஸ் நிழற்கூரைகள் மட்டுமே உள்ளன.நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரவுண்டானாக்களில் பொள்ளாச்சியின் அடையாளத்தை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சிலை அமைப்பு

இந்நிலையில், சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, மூன்று கோடி ரூபாய் செலவில், திருவள்ளுவர் திடல் சந்திப்பு, மார்க்கெட் ரோடு சந்திப்பு ஆகியவை விரிவாக்கம் செய்து மேம்பாடு செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.ரோடு விரிவாக்கம் செய்து, ரவுண்டானா, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவை அழகுப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.ரவுண்டானா அழகுப்படுத்தும் வகையில், அழகான வண்ண செடிகள், ஹார்ட் செடி என கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரவுண்டானா நடுவே, ஐந்து அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.பெயரளவில் திருவள்ளுவர் திடல் இருந்தது. தற்போது, அங்கு சிலை வைக்கப்பட்டு பெருமைப்படுத்தியது போன்று உள்ளது என அனைவரும் வரவேற்றுள்ளனர்.

வரலாறு முக்கியம்

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், திருவள்ளுவர் சிலை அமைத்து, அதை சுற்றிலும் பூங்கா அமைத்துள்ளது வரவேற்கதக்கது.அதே நேரத்தில், ரவுண்டானாவில் உள்ள செடிகளை பராமரிக்க வேண்டும். ரவுண்டானாவில் நடந்து செல்லும் சிலர், செடிகளை சேதப்படுத்துகின்றனர். இதனால், அதன் அழகு பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, ரவுண்டானாவை சுற்றிலும், கிரில் அமைக்க வேண்டும்.திருவள்ளுவர் திடலில் அமைந்துள்ளது போன்று, நகரில் உள்ள பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, தபால் அலுவலகம், தேர்நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரவுண்டானாக்களை பராமரிக்க வேண்டும்.உடுமலையில் நகராட்சி வாயிலாக ரவுண்டானா பராமரிக்கப்பட்டு பூங்காவுடன் ஜல்லிக்கட்டு மாடு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்றும், திருவள்ளுவர் திடல் போன்றும், மற்ற ரவுண்டானக்களை பராமரிப்பது குறித்தும், அடையாளங்களை அமைக்கவும், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் இணைந்து இதை செய்தால் பொள்ளாச்சியின் அழகை மேம்படுத்த முடியும்.மேலும், வரலாற்றை உணர்த்தும் வகையில் அமையும் அடையாளங்கள், மக்களின் கவனத்தை ஈர்க்கும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ