உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி

ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி

கோவை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் செயல்பாடுகளை, அரசு விரைந்து தெளிவுபடுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு முன்பு இருந்த, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரி, ஜேக்டோ - ஜியோ, டிட்டோ ஜாக், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 80 சங்கங்கள், நீண்ட நாட்களாக போராடி வருகின்றன. இந்நிலையில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்த குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் நான்கு நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கடித எண்ணில், ஆண்டைக் குறிக்கும் வகையில் 2025-2031 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், குழுவின் அறிக்கை 2031ல்தான் சமர்ப்பிக்கப்படுமா என்று சந்தேகம் எழுவதாக, ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த குழு தனது அறிக்கையை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்காமல், 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கும் போல் தெரிகிறது. ஓய்வூதியக் குழு அமைக்கப்பட்டதும், சங்கங்களுடன் கூட்டம் நடத்துவதும், கண்துடைப்பாக இருக்கலாம். குழுவின் செயல்பாடுகள் குறித்து, அரசு விரைந்து தெளிவுபடுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி