உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்தண்ணன் குளக்கரையில் வசித்தவர்களின் ஓட்டுரிமை என்ன செய்வது; கலெக்டர் ஆய்வு

முத்தண்ணன் குளக்கரையில் வசித்தவர்களின் ஓட்டுரிமை என்ன செய்வது; கலெக்டர் ஆய்வு

கோவை: முத்தண்ணன் குளக்கரையில் வீடு கட்டி வசித்தவர்கள், தற்சமயம் எந்தெந்த இடங்களில் வசிக்கிறார்களோ அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வாக்காளர் இடப்பெயர்ச்சி படிவம் பெற்ற பின்பு, பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க, கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சி பகுதியில், நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தவர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டு, இடித்து அகற்றப்பட்டன. முத்தண்ணன் குளத்தில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. அங்கு வசித்தவர்களுக்கு வீரகேரளம், மலுமிச்சம்பட்டி, கோவைப்புதுார் அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டது. அதன் பின், அவ்வீடுகள் இடித்து அகற்றப்பட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், குளக்கரை மேம்படுத்தப்பட்டது. முத்தண்ணன் குளக்கரையில் வசித்தவர்களின் ஓட்டு, கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் பாகம் எண்: 69, 70, 71ல் இருந்தன. மொத்தம், 3,013 ஓட்டுக்கள் இன்னமும் வடக்கு தொகுதியிலேயே இருக்கின்றன. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி துவங்கியுள்ளது. இதன்படி, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் ஓட்டுக்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு நீக்குவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், முத்தண்ணன் குளக்கரை பகுதியை, நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரை கண்ணன் மற்றும் தேர்தல் பிரிவினர், ஓட்டு விபரங்களை விளக்கினர். அதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அங்கு வசிப்போரிடம் இருந்து இடப்பெயர்வுக்கான படிவத்தை பெற்று, அந்த தொகுதிக்கான பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன் பிறகே, வடக்கு தொகுதியில் உள்ள பெயர்களை நீக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த பகுதிகளையும் கவனிங்க!

வாலாங்குளத்தின் கரையில் வசித்தவர்கள் அம்மன் குளத்துக்கும், உக்கடம் ஜி.எம். நகர், கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசித்தவர்கள் கழிவு நீர் பண்ணை வளாகத்துக்குள் உள்ள குடியிருப்புகளுக்கும் இடம் பெயர்ந்திருக்கின்றனர். குனியமுத்துார் சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்தவர்கள் வெள்ளலுாருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஓட்டுரிமை எந்தெந்த பகுதியில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்து, அப்பகுதிக்கான சட்டசபை தொகுதிகளில் இணைக்க, தேர்தல் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள அனைத்து வீடுகளிலும் வசிப்போரிடம் ஆவணங்கள் பெற்று, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே, தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை