ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்? ரேஸ்கோர்ஸ் வக்கீல் சண்முகம் கேட்கிறார்
கோவை: மதுரை வக்கீல் வாஞ்சிநாதன், ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, சுப்ரீம் கோா்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது. கடிதம் எழுதிய வக்கீல் மீது, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய பெஞ்ச், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை கைவிடக்கோரி, வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். இது குறித்து, கோவை ரேஸ்கோர்ஸ் வக்கீல் ஆர்.சண்முகம் கூறியதாவது: நீதிபதி சுவாமிநாதன் எளிமையானவர். பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்கியவர். அவரது தீர்ப்புகள் ஜாதி, மதங்களை கடந்து ஏழை எளியவர்களுக்கு நீதி தரும் விதத்தில் இருக்கின்றன. ஒரு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறதோ, அவர் நீதிபதியை கடவுளாக நினைப்பதும், யாருக்கு சாதகமாக இல்லையோ, அவர் நீதிபதியை கல் என்று நினைப்பதும் இயல்பு. நீதிபதிகள் அதை பற்றி கவலைப்படாமல் மிகுந்த பணிச்சுமையுடன் பணியாற்றுகிறார்கள். எந்த வழக்கும் வக்கீலுக்கும், நீதிபதிக்கும் இடையிலான போட்டி அல்ல. இருவரும் சேர்ந்து நீதிபரிபாலனத்தை நிலைநாட்ட, அவரவர் பங்கை அளிக்கிறார்கள். தனது வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டாம் என்று வக்கீலுக்கு தோன்றினால், வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு கேட்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வக்கீல், நீதிபதி மேல் ஒரு புகார் மனுவை, மேல்நீதிபதிக்கு அனுப்பினால், நிச்சயமாக நீதி பரிபாலனத்தில் வக்கீல் தலையிட்டதாக தான் அர்த்தம். ஒவ்வொரு வக்கீலும், நீதிபதி மீது புகார் அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நீதி பரிபாலனம் எப்படி நடைபெறும்? இவ்வாறு, சண்முகம் கூறி னார்.