கோவை;தேவையான நிலம் இன்னும் முழுமையாக கையகப்படுத்திக் கொடுக்காததால், கோவை, அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி தொய்வடைந்திருக்கிறது.கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு ரூ.1,621 கோடியில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்கிறது. நான்கு ஆண்டுகள்
கடந்த, 2020, நவ., 21ல் இத்திட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். நான்கு ஆண்டுகளுக்குள் இப்பணியை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது; இதன்படி, வரும் நவ., மாதத்துக்குள் முடிக்க வேண்டும். அமைச்சர் அறிவுறுத்தல்
அதற்கு முன்னதாக, ஆக., மாதத்துக்குள் முடிக்க, அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தேவையான நிலம் இன்னும் கையகப்படுத்திக் கொடுக்காததால், ஒப்பந்த காலத்துக்குள் மேம்பாலப் பணியை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஏனெனில், இரு வழித்தடங்களிலும் தலா இரு ஏறுதளம், இரு இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும். இதில், சிட்ரா சந்திப்பு அருகே ஏறுதளம் அமைக்கும் பணி மட்டும் முடியும் தருவாயில் இருக்கிறது.அரவிந்த் கண் மருத்துவமனை அருகேயும், பன்மால் எதிரே பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகேயும், இறங்குதளம் கட்டும் பணி நடந்து வருகிறது.பீளமேடு சந்திப்பில் பி.எஸ்.ஜி., டெக் முன் ஏறுதளம், சுகுணா கல்யாண மண்டபம் அருகே இறங்கு தளம், பி.ஆர்.எஸ்., மைதானம் எதிரே ஜி.டி.நாயுடு மியூசியம் அமைந்துள்ள பகுதியில் இறங்கு தளம் அமைக்க, துாண்கள் எழுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் துவங்கவில்லை
பன்மால் சந்திப்பை கடந்து ஏறு தளம், பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே ஏறுதளம் கட்டும் பணி இன்னும் துவங்கவில்லை. மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்கள் புதுப்பிக்க வேண்டும்; மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அகலப்படுத்த வேண்டும்; ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான பணிகள் துவங்கவில்லை.மேம்பாலப் பணிக்காக, 8 வார்டுகளில், நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. 500 நில உரிமையாளர்களிடம், 24 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் நிலம் கையகப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்காததால், மேம்பாலப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகின்றனர். 'பிப்.,க்குள் நிலம் கொடுப்போம்'
மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவு டி.ஆர்.ஓ., ஜீவாவிடம் கேட்டதற்கு, ''நிலம் கையகப்படுத்துவது நீண்ட செயல்முறை. ஆவணங்களை சரிபார்த்து, இழப்பீடு வழங்கி, பத்திரப்பதிவு செய்ய வேண்டும். என்றாலும் கூட, நிலம் கையகப்படுத்தும் பணியில், 70 சதவீதம் முடிந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்துக்குள் மீதமுள்ள, 30 சதவீத நிலம் கையகப்படுத்திக் கொடுப்போம்,'' என்றார். பாக்கி வேலை நிறைய!
மேம்பால பணிகளில் துாண்கள் எழுப்பப்பட்டு, 'பாக்ஸ் கர்டர்' முறையில் ஓடுதளம் அமைப்பது மட்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, நான்கு 'லாஞ்சர்' இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதில், உப்பிலிபாளையம் முதல் அண்ணாதுரை சிலை சந்திப்பு வரை ஓடுதளம் அமைக்கும் பணி தற்போது துரிதகதியில் நடந்து வருகிறது. இருப்பினும், சிட்ரா சந்திப்பு, ஹோப் காலேஜ் மற்றும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு முதல் பீளமேடு வரை, இன்னும் ஓடுதளம் அமைக்கவில்லை.
பணிகள் முடிய அக்., மாதமாகி விடும்
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அதிகாரிகள் கூறியதாவது:'லாஞ்சர்' இயந்திரங்களை இடம் மாற்றி பொருத்தும் பணி நடப்பதால், மேம்பால வேலை 'ஸ்லோ'வாக நடப்பது போல் தெரியும். ஓரிடத்தில் கழற்றி, இன்னொரு இடத்தில் பொருத்துவதற்கு ஒரு மாதமாகும்.இதுவரை, 65 சதவீத பணி முடிந்திருக்கிறது.உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ஓடுதளம் அமைக்கும் பணியை, செப்., கடைசி வாரம் அல்லது அக்., மாதத்துக்குள் முடித்து விடுவோம். பாலங்களை அகலப்படுத்துவது, ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கவும், மழை நீர் வடிகாலுடன் நடைபாதை ஏற்படுத்தவும் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.மெட்ரோ சுரங்கமும் வருகிறதுஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க, 'மெட்ரோ ரயில்' நிறுவனத்திடம் ஆலோசிக்க வேண்டும். 'மெட்ரோ ரயில்' திட்டத்தில், சுரங்க நடைபாதை திட்டமிடப்பட்டு இருக்கிறது. நாம் செலவழித்து அமைத்த பின், இடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இப்போதைக்கு மெட்ரோ நிறுவனம் செய்வதாக இருக்கிறது; அந்நிறுவனம் செய்வதாக இருந்தால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைப்பது கைவிடப்படும்.இரு இடங்களில் சிறு பாலங்கள் அகலப்படுத்தி விட்டோம். லட்சுமி மில்ஸ் அருகே விரைவில் துவக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.