உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தோண்டிய குழியை மூடியாச்சு வடிகால் கட்டுறது எப்போ? மாநகராட்சியின் அரைகுறை வேலையால் மக்கள் அவஸ்தை

 தோண்டிய குழியை மூடியாச்சு வடிகால் கட்டுறது எப்போ? மாநகராட்சியின் அரைகுறை வேலையால் மக்கள் அவஸ்தை

கணபதி: கணபதி மாநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒன்று முதல் நான்கு பிளாக் வரையிலான வீடுகள் உள்ளன. அவற்றை வாங்கியவர்கள், வீடுகளை புதுப்பித்துக் கட்டியிருக்கின்றனர். பிரதான ரோடு மற்றும் குறுக்கு ரோடுகள், பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி வசம் வீட்டு வசதி வாரியம் ஒப்படைத்து விட்டது. அதனால், குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு மற்றும் ரோடு வசதிகளை மாநகராட்சியே செய்து தருகிறது. பிளாக் எண் 4 இரண்டாவது குறுக்குத் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருகின்றன. இதன் ஒரு பகுதியில் மழை நீர் வடிகால் சமீபத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எதிர்புறத்தில் கட்டுவதற்காக, வீதி துவக்கத்தில் இருந்து கடைசி வரை செப். 6ல் வீட்டை ஒட்டி குழி தோண்டப்பட்டது. சிலாப்களை பெயர்த்தெடுத்து விட்டனர். ஆங்காங்கே உள்ள மரங்களை வெட்டவோ, வேரோடு எடுத்து வேறிடங்களில் நடவோ மனமின்றி குழி தோண்டி விட்டனர். வடிகால் முழுமையாக கட்ட முடியாது என உனர்ந்ததும் குழியை மூடி விட்டு போய் விட்டனர். மூன்றரை மாதம் ஆகியும் வடிகால் கட்டவில்லை. சிலாப்களை இடித்ததால், வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் குடியிருப்போர் தவிக்கின்றனர்.அதிகாரிகளிடம் முறையிட்டால், ஒப்பந்ததாரரிடம் சொல்லுங்கள் என மொபைல் நம்பர் கொடுக்கிறார்கள். அந்த நம்பரில் அழைத்தால் எடுப்பதே இல்லை, என கூறுகின்றனர். வீட்டு உரிமையாளர் சங்க செயலாளர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ''தீபாவளிக்கு பின் கட்டிவிடுவதாக கூறினர். குழி தோண்டியபோது, சில வீடுகளில் இரும்பு கதவுகளையும் சேதப்படுத்தி விட்டனர். அதையும் ஒப்பந்ததாரரிடம் கேளுங்கள் என அதிகாரிகள் சொல்கின்றனர்'' என்றார். அதிகாரிகளிடம் கேட்ட போது, '5 மரங்கள் வெட்ட வருவாய் துறை அனுமதி பெற வேண்டியிருக்கிறது. வீட்டில் இருந்து வாகனங்கள் எடுக்க சிலாப் அமைத்து கொடுப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை