உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் வெள்ளை ஈ தாக்கம்; கட்டுப்படுத்த விழிப்புணர்வு

தென்னையில் வெள்ளை ஈ தாக்கம்; கட்டுப்படுத்த விழிப்புணர்வு

பொள்ளாச்சி; அங்கலக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு, தென்னையில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, வேளாண் பல்கலை மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக கோவை வேளாண் பல்கலை கல்லுாரி, நான்காமாண்டு மாணவியர், பொள்ளாச்சியில் தங்கியுள்ளனர். அவர்கள், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிந்து, செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.அங்கலக்குறிச்சி பகுதிக்கு சென்ற மாணவியர், தென்னையில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவியர் கூறியதாவது: வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள், ஏக்கருக்கு 8 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட வேண்டும். அல்லது தென்னை மரங்களின் தண்டு பகுதியைச் சுற்றி கட்டி ஈக்களை அழிக்கலாம். வெள்ளை ஈ தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு, விசைத் தெளிப்பான் கொண்டு வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து ஈக்களின் பெருக்கதை குறைக்கலாம்.வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒட்டுண்ணி குளவி, 'என்கார்சியா' கூட்டுப்புழு பருவத்தை உள்ளடக்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம், பத்து மரத்துக்கு ஒரு இலைத்துண்டு வைத்து கட்டுப்படுத்தலாம்.'கிரைசோபிட்' என்ற பச்சை கண்ணாடி இயற்கை பூச்சி, இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.விளக்குப்பொறி ஏக்கருக்கு இரண்டு வைக்கலாம்.இதேபோல, மைதா மாவு பசை கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மில்லி சேர்த்து, கீழ்நிலை அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூஞ்சணங்கள் மீது தெளிக்க வேண்டும்.என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள், கிரைசோபிட் இரை விழுங்கிகள், கைலேகோரிஸ் என்ற பொறி வண்டுகளை தோப்புகளில், இயற்கையாக பெருக்கமடைய ஏதுவாக சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டைப்பயறு போன்ற பயிர்களை பயிர் செய்யலாம். செயற்கை பைரித்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ