உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்போடும் வாக்காளர்கள் யார், யார்? பட்டியல் சேகரிக்கிறது தி.மு.க.,

ஓட்டுப்போடும் வாக்காளர்கள் யார், யார்? பட்டியல் சேகரிக்கிறது தி.மு.க.,

கோவை: லோக்சசபா தேர்தலையொட்டி, கோவையில் முக்கிய கட்சிகள் களமிறங்கி விட்டன. வாக்காளர்களின் பிரச்னைகள் என்னென்ன என, அலசி ஆராயும் பணியில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டிருக்க, ஓட்டுப்போடும் வாக்காளர்கள் யார், யார் என்ற விபரம் சேகரிக்கும் பணியில், தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். ஆக, தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது.லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடி (பூத்) பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணி செய்து வருகின்றனர். கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும், 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 20 ஆயிரத்து, 534 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஏழு பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம், பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை உறுதிப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் கூறியதாவது:லோக்சபா தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இடம் பெற்றுள்ள வாக்காளர்களை, குடும்பம் வாரியாக தகவல் சேகரித்து வருகிறோம். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டுச்சாவடியில், 1,200 வாக்காளர்கள் இருப்பர். சிலருக்கு ஓட்டு ஓரிடத்திலும், குடும்பம் வேறிடத்திலும் வசிக்கும் அல்லது வேறு நகரத்துக்கு இடம் பெயர்ந்திருப்பர். அதுபோன்ற வாக்காளர்கள் விபரத்தை சேகரித்து, தனியாக பட்டியல் தயாரிக்கிறோம்.ஓட்டு போடக்கூடிய வாக்காளர்கள் யார், யார் என்கிற விபரத்தை, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்கென, பிரத்யேகமாக படிவம் வழங்கியிருக்கிறோம். தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., தயாராக இருக்கிறது. எங்களுடன் கூட்டணி கட்சிகள் கரம் கோர்ப்பதால், பலம் இன்னும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
பிப் 02, 2024 07:57

ஒரு குடும்பத்துக்கு 20 ஆயிரம் கொடுக்க திட்டம்.


ராமகிருஷ்ணன்
பிப் 01, 2024 10:40

பழைய கள்ள ஓட்டு போடும் திமுக கும்பல் குறைந்து வருது. பணத்துக்காக ஓட்டு போட்டும் திமுகவின் திருமங்கலம் பார்முலா கும்பலுக்கு தான் இப்போ மவுசு. புதிய இளம் வாக்காளர்கள் நிச்சயம் திருட்டு கும்பல் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதை கவர இந்த முயற்சி.


புதிய வீடியோ