இதய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன; அரசு மருத்துவமனை டீன் விளக்கம்
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், உலக இதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு பேரணி நடந்தது. நர்சிங் மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவமனை டீன் கீதாஞ்சலி பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், ''இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால், இருதய நோய்கள் ஏற்படுகின்றன. கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஜன., முதல் ஆக., வரையிலான எட்டு மாதங்களில், 1,800 பேருக்கு இருதய சிகிச்சை நடந்துள்ளது. சராசரியாக, 180 பேருக்கு ஆஞ்சியோகிராம், 50 பேருக்கு ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது,'' என்றார். நிகழ்ச்சியில், இருதய சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் நம்பிராஜன், அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பல ர் பங்கேற்றனர். பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், நர்சிங் மாணவியர் என பலரும் பங்கேற்று பொதுமக்களுக்கு உலக இருதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இருதய மருத்துவத் துறை சார்பில், பல்வேறு துறையை சார்ந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் கவுரவிக்கப்பட்டனர்.