மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், கோவை - ஊட்டி ஆகிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேட்டுப்பாளையத்தில், கோவை மற்றும் ஊட்டி சாலையின் இரு பக்கமும், பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இங்கு வரும் பொதுமக்கள் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர், இம்மாதம் முதல் வாரம் விடுத்த அறிக்கையில், 'தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பராமரிப்பில் உள்ள எண்: 181ல் மேட்டுப்பாளையம் நகராட்சியில், கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முதல், ஓடந்துறை ஊராட்சி எல்லை வரை, தேசிய நெடுஞ்சாலையின் இரு புறம் உள்ள ஆக்கிரமிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில், சாலையின் இருபுறம் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வைத்துள்ள ஆக்கிரமிப்பை, தாங்களாகவே முன்வந்து, வரும் 10ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும்; தவறும் பட்சத்தில், பத்தாம் தேதிக்கு பின், தேசிய நெடுஞ்சாலை துறை வாயிலாக அகற்றப்படும்' என கூறியிருந்தார்.ஆனால், அவர் விடுத்திருந்த கெடுவுக்கு மேல் ஒன்பது நாட்களாகியும், மேட்டுப்பாளையம் நகரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை; அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அறிவிப்பு, வெறும் கண் துடைப்பு என, பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊட்டியில் மார்ச் மாதம் கோடை சீசன் துவங்கும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளையம் வழியாக வாகனங்களில், நீலகிரி மாவட்டம் செல்வர். ஆனால், மேட்டுப்பாளையத்தில், ஊட்டி, கோவை, அன்னுார் ஆகிய மூன்று சாலைகளிலும் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடிவதில்லை. ஆக்கிரமிப்பை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றுவதாக அறிவித்திருந்தது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தேதி கடந்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, வருத்தம் அளிக்கிறது. ஊட்டியில் கோடை சீசன் துவங்கும் முன்பாக, ஆக்கிரமிப்பை அகற்றினால் தான், மேட்டுப்பாளையம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்தில், கோவை, ஊட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., இடங்களை ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுக்குப் பின் கடை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.