ரொட்டிக்கடை பகுதியில் காட்டுத்தீ; ஒரு மணி நேரம் போராடி அணைப்பு
வால்பாறை; வால்பாறை, ரொட்டிக்கடை பகுதியில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அனைத்தனர்.வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் பசுமை மாறாக்காடுகளும், அரிய வகை வனவிலங்குகளும் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவத்துவங்கியுள்ளது. பலத்த காற்றும் வீசுவதால் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது.நேற்று முன்தினம் ரொட்டிக்கடை புனித வனசின்னப்பர் ஆலயம் அருகே, சாலையோரத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் காய்ந்த புல்வெளியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, ரொட்டிக்கடை புனித வனசின்னப்பர் ஆலயத்தின் அருகில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் காய்ந்த புல்வெளிகள், செடி, கொடிகளில் பரவியது. அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குடிநீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து செல்கின்றன. வால்பாறையில் தற்போது வறட்சி நிலவும் நிலையில், பலத்த காற்று வீசுவதால், சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, சிகரெட் பிடிக்ககோ கூடாது.வனப்பகுதியை ஒட்டி தீத்தடுப்புக்கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியர் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி அருகே கொண்டு செல்லக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.