உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராசியான கோவையில்தான் சுற்றுப்பயணம் துவங்கும் அ.தி.மு.க.,வுக்கு கைகொடுக்குமா 2011 சென்டிமென்ட்?

ராசியான கோவையில்தான் சுற்றுப்பயணம் துவங்கும் அ.தி.மு.க.,வுக்கு கைகொடுக்குமா 2011 சென்டிமென்ட்?

கோவை : கோவை அ.தி.மு.க.,வுக்கு ராசியான ஊர். இங்கிருந்துதான் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதற்காக இ.பி.எஸ்., மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை துவக்குவார் என, வேலுமணி 5 மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார். அதன்படி, தற்போது இ.பி.எஸ்.,சின் சுற்றுப்பயணம் கோவையில் இருந்தே துவங்க உள்ளது.'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்தோடு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 234 தொகுதிகளிலும் பிரசார சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். முதல்கட்டமாக வரும் ஜூலை 7ல் கோவையில் சுற்றுப்பயணம் துவங்குகிறது.

ராசியானது கோவை

பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் கடந்த ஜன., இறுதியிலேயே துவங்கும் என கூறப்பட்டது. அப்போது நடந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, “தி.மு.க., ஆட்சியை அகற்றி, அ.தி.மு.க., ஆட்சியை அமைக்க, இ.பி.எஸ்., தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவை அ.தி.மு.க.,வுக்கு ராசியானது. கோவையில்தான் அவர் சுற்றுப்பயணத்தைத் துவங்குவார். ஜன., 31ம் தேதி சுற்றுப்பயணம் துவங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.பின்னர் அதே கூட்டத்தில், “ஜன., 31, பிப்.,1ல் சுற்றுப்பயணம் நடப்பதாக இருந்தது. சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், எப்போது இருந்தாலும், சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்துதான் தொடங்குவார்” என்றார்.அதன்படி, கோவையில் இருந்துதான் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் துவங்குகிறது.

2011 சென்டிமென்ட்

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலைச் சந்திப்பதற்காக, மறைந்த முதல்வர் ஜெ., கோவையில்தான் முதல் பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த பொதுக்கூட்டம்ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமிட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தது. கொங்குமண்டலம் முழுக்கஅ.தி.மு.க., பக்கம் நின்றது. கடந்த தேர்தலில்தி.மு.க., பெரும் பலத்தோடு ஆட்சியைக் கைப்பற்றினாலும், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளும் அ.தி.மு.க., வசமே நீடிக்கின்றன.

எகிறும் எதிர்பார்ப்பு

இம்முறையும், கோவையின் ராசி கை கொடுக்கும் என அ.தி.மு.க.,வினர் திடமாக நம்புகின்றனர். ஆகவேதான், எப்போது துவங்கினாலும் அது கோவையில் இருந்துதான் என திட்டவட்டமாக வேலுமணி கூறியிருந்தபடி, தற்போது சுற்றுப்பயணமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.2011 தேர்தலின் முதல் பொதுக்கூட்டத்துக்கு அசாத்திய கூட்டத்தை தற்போதும் கூட்டிக் காட்ட வேண்டும் என, கங்கணம் கட்டாத குறையாக, அ.தி.மு.க.,வினர் செயல்படுவர் என எதிர்பார்க்கலாம்.சுற்றுப்பயணம் துவங்குவதை அ.தி.மு.க.,வினர் மட்டுமல்லாது, ஆளும் தி.மு.க.,வுமே ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை