வியாபாரிகள் கடை விரிக்கவா நடைபாதை? வி.எச்.ரோட்டில் நடக்க பாதையின்றி மக்கள் அவஸ்தை
பாதிசாலை வரை குப்பை
மேட்டுப்பாளையம் ரோடு, வடமதுரை தபால் அலுவலகம் மற்றும் ரேஷன் கடை அருகே, சாலையோரம் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. பெருமளவு குவிந்துள்ள குப்பை, பாதி சாலை வரை சிதறிக்கிடக்கிறது. கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றமும் வீசுகிறது.- சிவசங்கர், வடமதுரை. வீதியில் ஓடும் கழிவுநீர்
தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில், காந்திநகர், மூகாம்பிகை கோவில் தெருவில், வீட்டு உரிமையாளர்கள் சிலர், திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- ஸ்ரீ பாலாஜி, இடையர்பாளையம். சீரமைக்க தாமதம் ஏன்?
நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., பல் மருத்துவமனை அருகில், முக்கிய சாலை பகுதியில் சேதமடைந்த பகுதி அருகே, வெறும் தடுப்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் கம்பிகள் குவிக்கப்பட்டுள்ளன. பலமுறை வலியுறுத்தியும், கம்பியை அகற்றி, சேதமடைந்த சாலையை சீரமைக்கவில்லை.- சங்கர், நவஇந்தியா. அடிப்படை வசதியின்றி தவிப்பு
மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த டிச., 2023 முதல் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. மாதம் ஒருமுறை கூட தண்ணீர் விடப்படுவதில்லை. சாலைகள் சேதமடைந்துள்ளன. தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை.- ஜென்சி, மலுமிச்சம்பட்டி. நடைப்பாதை ஆக்கிரமிப்பு
டவுன்ஹால், வி.எச்.ரோட்டில், கடைக்காரர்கள் தங்கள் பொருட்களை, சாலையோர நடைப்பாதையில் அடுக்கி வைக்கின்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடப்பதால், விபத்து நடக்கிறது. போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.- பழனிச்சாமி, டவுன்ஹால். தடுமாறும் பாதசாரிகள்
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் கலெக்டர் இல்லம் முன்புறம், பாதாள சாக்கடை சிலாப் உடைந்த நிலையில் உள்ளது. நடந்து செல்பவர்கள், குழந்தைகள் தடுமாறி கீழே விழுகின்றனர். விரைந்து, உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும்.- யுவராஜ், திருமகள் நகர். பள்ளத்தால் தொடரும் விபத்து
தடாகம் ரோடு, காந்திபார்க்கில் சாலை நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர், தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர். பெரும் விபத்துகள் நடக்கும் முன், பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.- உன்னிகிருஷ்ணன், காந்திபார்க். கொசு உற்பத்தி படுஜோர்
பீளமேடு, 26வது வார்டு, ஆதி திராவிடர் காலனியில் கடந்த ஒரு மாதமாக சாக்கடை கால்வாய் துார்வாராததால், கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதி முழுவதும், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.- பிரகாஷ், பீளமேடு. தார் சாலை வேண்டும்
பீடம்பள்ளி ஊராட்சி, நடுப்பாளையம் கிராமம், நாவலர் நகர் செல்லும் வழி மற்றும் அபிராமி நகரின் உள்பகுதிகளில் சாலை வசதியில்லை. மண் ரோடாக இருப்பதால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தெருவிளக்கு வசதியில்லாததால், இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- ராமன், பீடம்பள்ளி. சாக்கடையில் அடைப்பு
கவுண்டம்பாளையம், இரண்டாவது வீதி, எஸ்.கே.ஆர்.நகர் பகுதியில் சரிவர சாக்கடை கால்வாய் துார்வாருவதில்லை. கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை நிரம்பியுள்ளது. அடிக்கடி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. சீரான இடைவெளியில் கால்வாயை துார்வார வேண்டும்.- முத்து சரவணன், கவுண்டம்பாளையம்.