காற்றுக்கு சாயும் பிளக்ஸ்கள்; ஓட்டுநர்கள் திக்திக் பயணம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெகமம் சுற்று பகுதியில், ரோட்டோரம் சாய்ந்த பிளக்ஸ்களை அகற்ற வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டார பகுதியில், ரோட்டோரம் அதிகளவு தனியார் விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், சொக்கனூர், கிணத்துக்கடவு --- நெகமம் வடசித்தூர் வழித்தடம் மற்றும் கோவில்பாளையம் -- நெகமம் ரோட்டின் ஓரத்தில் பெரிய அளவில் தனியார் லே--அவுட், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.தற்போது மழை காலம் என்பதால் அதிவேகமாக காற்று வீசுகிறது. இந்த பிளக்ஸ்கள் காற்றுக்கு ரோட்டில் சாய்ந்த நிலையிலும், சில இடங்களில் கிழிந்தும் காணப்படுகிறது.இதனால், பைக் ஓட்டுநர்கள் இவ்வழியில் பயணிக்க அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் கிழிந்த பிளக்ஸ்கள் வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால் நிலை தடுமாறுகின்றனர். எனவே, ரோட்டோர பிளக்ஸ்களை உடனடியாக அகற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.