உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!

போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!

கோவை : போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு தடுமாறுகிறது.மக்கள் தொகை அடிப்படையில், கோவை மாநகராட்சிக்கு பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, கடந்த 2022ல் அரசாணை (எண்: 152) வெளியிடப்பட்டது.அதன்படி, 100 வார்டுகள் உள்ள கோவை மாநகராட்சிக்கு, 301 பணியிடங்கள் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை என்ற அடிப்படையில் கணக்கிட்டு, மிக குறைவாகவே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், 16.50 லட்சம் மக்கள் கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.13 ஆண்டுகள் கடந்து விட்டன.இப்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.இதை புரிந்து, பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.ஏனெனில், மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மாநகராட்சியின் பணி முக்கியமானது.இதில், வீடோ அல்லது வணிக கட்டடமோ அல்லது எவ்வித கட்டடமாக இருப்பினும் நகரமைப்பு பிரிவில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும். உதவி நகரமைப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.கோவை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒருவர் வீதம், ஐந்து உதவி நகரமைப்பு அலுவலர்களே இருக்கின்றனர்.ஒரு மண்டலத்துக்கு, 20 வார்டுகள் உள்ளன. 20 வார்டுகளில் இருந்து கொடுக்கப்படும் விண்ணப்பங்களை ஒரே ஒரு அதிகாரியே பரிசீலித்து, ஆய்வு செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது.அரசாணை 152ல், மண்டலத்துக்கு இருவர் வீதம், உதவி நிர்வாக பொறியாளர் அந்தஸ்தில் 10 உதவி நகரமைப்பு திட்டமிடுநர் பணியிடங்கள் மற்றும், உதவி பொறியாளர் அந்தஸ்தில், 10 நகரமைப்பு ஆய்வர் பணியிடங்கள் தோற்றுவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இன்று வரை இப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மண்டலத்துக்கு ஒருவர் வீதம் உதவி நகரமைப்பு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.மற்ற பணியிடங்கள் பூர்த்தி செய்யாததால், நகரமைப்பு பிரிவினர் தடுமாற்றம் அடைகின்றனர்.

எவ்வளவு வேலைதான் பார்க்கறது!

நகரமைப்பு பிரிவினர் கூறியதாவது:நகரமைப்பு பிரிவுக்கு ஏராளமான வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. கட்டட வரைபட அனுமதி கொடுப்பது மட்டுமின்றி, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டியது முக்கியமான பணி. 'ரிசர்வ் சைட்'டுகளை மீட்க வேண்டும்.அவற்றை மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும். 'ரிசர்வ் சைட்'டை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்திருந்தால், அவற்றை அகற்ற வேண்டும்.திட்டச்சாலைகள் உருவாக்க வேண்டும். திட்டச்சாலைகள் உருவாக்க வேண்டுமெனில், அவ்வழித்தடங்களில் உள்ள நிலங்களை அளவீடு செய்து, நிலம் கையகப்படுத்த வேண்டுமெனில், அதன் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, பத்திர நகல் பெற்று, இழப்பீடு கொடுக்க மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை. உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் நகரமைப்பு ஆய்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை