மக்கள் மனசு பிள்ளை, கணவன் மதுவுக்கு அடிமை பார்த்து கதறுகின்றனர் பெண்கள்
'தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்துவிட்டது. மற்ற நாட்களில் உயரவில்லை என சந்தோஷப்படுங்கள். குடிக்கும் பழக்கம் சமூகத்தில் அதிகமாகி இருக்கிறது.பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விஷயத்தையும், அரசு தரப்பில் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம்' என, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இது குறித்து,கோவை மக்கள் சிலரிடம் பேசி னோம்...வாய்ப்பு குறைவுதான்! பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நல்லதுதான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் சொல்கிறார்கள். இப்போதைக்கு செயல்படுத்த முடியுமா என்றால் வாய்ப்பு குறைவுதான். ஏனெனில், தினமும் பல கோடி ரூபாய் வருமானம் தரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டுமென்றால், அதற்கு இணையான வருமானம் வேறு வழிகளில் வரவேண்டும். -துரைராஜ், குறிச்சி.பெண்களின் கண்ணீர் ஒவ்வொரு 'குடி'மகனும் வாங்கும் சம்பளத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர். இவை அனைத்தும் இன்று பெண்களின் கண்ணீராக மாறியிருக்கிறது. அதுவும் இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. தனது கணவர், குழந்தைகள் கண்ணெதிரே குடியால் அழிவதை பார்த்து, பெண்கள் கதறுகின்றனர். அமைச்சர் சொன்னது நடந்தால் நல்லதுதான். ஆனால் நடக்குமா? -கண்ணன், மலுமிச்சம்பட்டி.'தி.மு.க.,வின் தில்லுமுல்லு' தி.மு.க., ஆ ட்சியில் இல்லாத போது மதுக்கடையை மூட வேண்டும் என்று சொன்னார்கள். தேர்தலில் வாக்குறுதியும் கொடுத்தனர். கனிமொழி, இளம் பெண்கள் விதவை ஆவதாக கவலைப்பட்டார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், மதுக்கடை மூடல் பற்றி வாய் திறப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆலோசித்து வருகிறோம் என்கிறார். தி.மு.க.,வின் இந்த தில்லு முல்லு எல்லாம் மக்களுக்கு தெரிந்து விட்டது. வரும் தேர்தலில் பதில் கொடுப்பார்கள். -- சவுமியா, கல்வியாளர்'பல பெண்கள் விதவை' டாஸ்மாக் மது வருமானத்தில் ஆட்சி நடத்தும் தி.மு.க., மதுக்கடைகளை மூட வாய்ப்பு இல்லை. தமிழக இளைஞர்களை மதுவில் மூழ்க வைத்து, பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம். மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன. கைக்குழந்தைகளுடன் பல பெண்கள் விதவையாகி உள்ளனர். வரும் தேர்தலிலும் மது விலக்கை அமல்படுத்துவோம் என, பொய் வாக்குறுதி கொடுப்பார்கள். இந்த முறை மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். - தீபிகா, குடும்பத்தலைவி'மதுவிலக்கு வேண்டும்' மது கலாசாரம் இப்போது அதிகமாகி விட்டது. இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி வருவதை பார்க்கும் போது சங்கடமாக உள்ளது. பல குற்றச் செயலுக்கும் இது காரணமாகிறது. பொதுமக்கள் நடமாடவும், வாகன இயக்கத்துக்கும் தொந்தரவாக இருக்கிறது. நிச்சயமாக பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மது இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது காலத்தின் அவசியம். --- சிவராமன், ஆட்டோ ஓட்டுநர்'சமுதாயம் சீரழிகிறது' மக் களை ஏமாற்றக் கூடிய விஷயம் தான் இது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் இதுபோன்ற வார்த்தைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. மதுவால் எப்படி சமுதாயம் சீரழிகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பலர், உழைக்கும் பணத்தை, அப்படியே மதுவுக்கு செலவு செய்து, போதை தலைக்கேறி சாலையில் படுத்திருக்கின்றனர். - அனந்த பார்த்திபன், பேராசிரியர்