சர்வர் பிரச்னையால் பதிவு மேற்கொள்வதில் சிக்கல் முகாமிற்கு வந்து காத்திருந்த பெண்கள்
பொள்ளாச்சி, ; 'சர்வர்' பிரச்னையால், கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பதிவுக்கு வந்த பெண்கள், மூதாட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.தமிழகத்தில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் பிரச்னைகளை சரி செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் துவங்கப்பட்டது.அதில், உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில், 20 இடங்களில், சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, விதவைச்சான்று, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, ரேஷன் கார்டு, மொபைல் எண் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி கோட்டத்தில், ஆனைமலை, வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் கடந்த, 4ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. வடக்கு ஒன்றியத்தில் மட்டும், 14 பேர் விண்ணப்பித்தனர்.இந்த முகாம் குறித்து தகவல் அறிந்து வந்தோர், ஒன்றிய அலுவலகங்களில் யாரை அணுகுவது என முதல் நாளில் திணறினர். கடந்த, இரண்டு நாட்களாக, 'சர்வர்' பிரச்னையால், பெண்கள், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வயது முதிர்ந்தோர், தரையிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து இருந்தனர்.முகாமிற்கு வந்த கணவரை இழந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் கூறியதாவது:நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதாக வந்த தகவலையடுத்து, ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தோம். இங்கு, 'சர்வர்' பிரச்னை காரணமாக பதிவுகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.அதிகாரிகள், சர்வர் எடுக்கவில்லை; சரியானதும் அழைக்கிறோம் எனக்கூறியதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.தாமதம் காரணமாக அதிகளவு பதிவுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்று முகாம்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு பிரச்னைகள் ஏற்படாமல் எளிதாக பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.