உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலை 6 முதல் மதியம் 2 மணி வரை துாய்மை பணியாளர்களுக்கு வேலை: ஒப்பந்த நிறுவன அறிவிப்புக்கு வந்தது எதிர்ப்பு

காலை 6 முதல் மதியம் 2 மணி வரை துாய்மை பணியாளர்களுக்கு வேலை: ஒப்பந்த நிறுவன அறிவிப்புக்கு வந்தது எதிர்ப்பு

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை குப்பை அள்ளும் பணியில் ஈடுபட வேண்டும் என, தனியார் ஒப்பந்த நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இது, பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி, தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்கள் காலை 6 மணிக்கு வேலையை துவக்க, 5.45 மணிக்கு வருகையை உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கம் தரப்பில் ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளித்ததும் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலை 6 முதல் மதியம் 2 மணி வரை குப்பை அள்ளும் பணியில் ஈடுபட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நமது நிறுவனத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், அவரவர்களுக்கு வழங்கிய வேலையை சிரத்தையுடன் செய்து வருகிறார்கள். சில பணியாளர்கள் எவ்வித முன்னறிவிப்பு இன்றி, தன்னிச்சையாக பணி செய்ய மறுப்பது; சக பணியாளர்களை செய்ய விடாமல் தடுப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை இனி தவிர்க்க வேண்டும். துாய்மை பணியை எவ்வித தடங்கலின்றி மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்தின் நியாயமான உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல், தனியாகவோ, கூட்டாகவோ ஒழுங்கீன செயல்களில் ஈடு பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். அனைத்து பணியாளர்களுக்கும் 6ம் தேதி (இன்று) முதல், காலை 6 முதல் மதியம் 2 மணி வரை பணி நேரமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்நேரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்கள் தற்சமயம் காலை 7 முதல் மதியம் 1 மணி வரை பணிபுரிகின்றனர். கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வசிப்போரால், 6 மணிக்குள் வர இயலாது என, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் மீண்டும் கட்டாயப்படுத்துவதால், பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. தொ ழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ''நகர்ப்பகுதியில் வசித்த துாய்மை பணியாளர்களை, நகருக்கு வெளியே இடப்பெயர்ச்சி செய்து விட்டனர். காலை 6 மணிக்கு பணிக்கு வருவதற்கு பஸ் வசதியில்லை. அனைவராலும் வாகனங்களில் வர இயலாது. இதற்கு முன் அதிகாலையில் பைக்கில் வந்தவர்கள் விபத்துக்குள்ளாகி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நிரந்தர துாய்மை பணியாளர்களில் 500 பேர், அலுவலக உதவியாளர்களாக உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், குப்பை அள்ள வருவதில்லை. அவர்கள் செய்ய வேண்டிய பணியை, தற்போதுள்ள பணியாளர்கள் செய்வதால் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். காலை 6 மணிக்கு சென்று கதவை தட்டினால் மக்கள் கோபப்படுவர். 7 மணிக்கு பிறகு சென்றால் மட்டுமே தரம் பிரித்து பெற முடியும். தொழிலாளர்கள் சென்ற சமயத்தில், வீட்டை திறந்து குப்பை தராதவர்கள், அலுவலகம் செல்லும்போது பொது இடத்தில் வீசி விட்டு சென்று விடுவர். ஆனால், தொழிலாளி சேகரிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு வரும். உணவு இடைவெளியில் ஒதுக்காமல், எட்டு மணி நேர வேலை வாங்குவது தவறு,'' என்றார்.

'மாற்று ஏற்பாடு செய்யப்படும்'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''மற்ற நகரங்களில் காலை 6 மணிக்கு துாய்மை பணி துவங்குகிறது. அதையே கோவையிலும் அமல்படுத்தப்படுகிறது. வாகன போக்குவரத்து துவங்குவதற்கு முன், பிரதான இடங்களில் குப்பை சேகரிக்க அதுவே சரியான நேரம். காலை 6 மணிக்கு வார்டு அலுவலகங்களுக்கு வந்து, வருகை பதிவை உறுதி செய்து விட்டு, ஒதுக்கிய வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிப்பதற்கு உகந்த நேரமாக இருக்கும். 7 மணிக்கு வந்து, 8 மணிக்கு துவங்கினால், தாமதமாகிறது. குப்பை சேகரிப்பது விடுபடுகிறது. இதற்கு முன் அமல்படுத்தியபோது, 75 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். 25 சதவீத ஊழியர்களால் வர முடியவில்லை. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். உணவு இடைவெளி கண்டிப்பாக ஒதுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை