கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
சூலுார்: கிராமப்புறங்களில் கட்சியினரின் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் தேதியை கடந்த, 15 ந்தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மறு நாள் காலை முதல், கட்சி சுவரொட்டிகள், விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கிராமப்புறங்களில் உள்ளாட்சி ஊழியர்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு கிராமமாக சென்று விளம்பரங்களை அழித்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் கிராமப்புறங்களில் தேர்தல் விதிமீறல்கள் உள்ளனவா என, ஆய்வு செய்து உடனுக்குடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளித்து வருகின்றனர். இதையடுத்து, சூலுார், சுல்தான்பேட்டை பகுதியில் அழிக்கப்படாமல் இருக்கும் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெங்கிட்டாபுரத்தில் நிழ்ற்குடையில் தலைவர்கள் படம் அகற்றப்படாமல் இருப்பது குறித்து நேற்று முன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த நிழற்குடையில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.