எட்டு வாரமாக சம்பளம் வரவில்லை; தொழிலாளர்கள் புகார்
அன்னுார்; குப்பனூரில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், குப்பனுார் ஊராட்சியில் செய்யப்பட்ட பணிகள் கடந்த 27ம் தேதி முதல் தணிக்கை செய்யப்பட்டு, பணிகள் அளக்கப்பட்டன. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.இதையடுத்து சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் குப்பனுார் இ சேவை மைய கட்டிடத்தில் நேற்று நடந்தது. வெள்ளிங்கிரி தலைமை வகித்தார்.வட்டார வள அலுவலர் கனகராஜ் தணிக்கை அறிக்கை வாசித்து பேசுகையில், ''இந்த ஊராட்சியில், கடந்த நிதியாண்டில், 56 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 27 பணிகள் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆறு ஆட்சேபனைகள் உள்ளன. கூடுதலாக சம்பளம் மற்றும் வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே விதி மீறி செலவு செய்த 5,032 ரூபாயை அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும்.பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஏழு வீடுகள் கட்டப்பட்ட பணிகளில் நான்கு ஆட்சேபனைகள் உள்ளன,'' என்றார்.தொழிலாளர்கள் பேசுகையில், 'ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். அதுவும் கடந்த எட்டு வார சம்பளம் இதுவரை வழங்கவில்லை. பலமுறை ஊராட்சி அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மிகுந்த சிரமத்தில் உள்ளோம்.அரசு விரைவில் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். 150 நாட்கள் வேலை தர வேண்டும்,' என தெரிவித்தனர்.தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிப்பதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாதேவி தெரிவித்தார். 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.