கோவையில் நாளை துவங்குகிறது உலக புத்தொழில் மாநாடு
கோவை; கோவை கொடிசியா வளாகத்தில் 9, 10ம் தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான 'டி.என். ஸ்டார்ட்அப்' சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு 2025' நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் இம்மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9.45 மணிக்கு துவக்கி வைக்கிறார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகிக்கிறார். உ லகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் தமிழக நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும், நாட்டில் முதன்முறையாக உலகப் புத்தொழில் மாநாடு கோவையில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இம்மாநாட்டில், 39 நாடுகளைச் சேர்ந்த, 264 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம்பெறுகின்றனர். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத் துறைகள் பங்கேற்கின்றன. வளாகத்தில் 750- அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 315 நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. 50க்கும் மேற்பட்ட தமிழக பிராண்டுகள், 150க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75க்கும் மேற்பட்ட தொழில்வளர் மையங்கள், 10க்கும் மேற்பட்ட யூனிகார்ன், சூனிகார்ன் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டையொட்டி, 'டி.என்.ஜி.எஸ்.எஸ்.' என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிகழ்வுத் திட்டமிடல்களும் இச்செயலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், விரும்பும் நிகழ்வில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். இரு நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில், உரையும் விவாதமும் நடக்கிறது. மாநாட்டில் 100 முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். ஸ்பாட் லைட் என்ற பெயரில், 117 அமர்வுகள் நடக்கின்றன. தலா 7 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த அமர்வுகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் சார்பில் உரை நிகழ்த்தப்படுகிறது. துணை நிகழ்வுகள்
இன்று குமரகுரு கல்லூரியில், 'அக்ரிபிரெனர்ஸ் கனெக்ட்' நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்டார்ட்அப் மாநாட்டின் ஒரு பகுதியான இதில், பதிவு செய்து பங்கேற்கலாம். இம்மாநாடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கானது எனினும், கோவை, திருப்பூர் தொழில்நகரங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்பதால், தொழில்முனைவோர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.