பன்றி பிடிப்பவர்கள் மீது தாக்குதல் 2பேர் கைது ; 5 பேருக்கு வலை
கடலுார்; கடலுார் அருகே பன்றி பிடிப்பவர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து,மேலும் 5 பேரை தேடிவருகின்றனர். கடலுார் மாநகர பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மதுரை, புதுக்கோட்டையில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள், கடலுார் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் நேற்று காலை பன்றிகளை பிடிக்க பயன்படுத்தும் டெம்போ வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை உபாதைக்கு சென்றனர். அப்போது, பன்றிகளை பிடிக்க ஆட்கள் வந்திருப்பதாக கூறி 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல், பன்றி பிடிப்பவர்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது. மேலும், டெம்போ வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி விட்டு தப்பினர். புகாரின் பேரில் கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து செடப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பரமணியன்,53; மகாலிங்கம், 45; இருவரையும் கைது செய்து, மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.