உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகிறது

பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகிறது

வேப்பூர், : வேப்பூரில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வராமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.சென்னை - திருச்சி, சேலம் - கடலுார் தேசிய நெடுஞ்சாலை இணையுமிடத்தில், வேப்பூர் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சென்னை, சேலம், திருச்சி, கடலுார், சிதம்பரம், புதுச்சேரி செல்லும் பயணிகள் பயனடைகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக சிமென்ட் ஷீட் போட்ட பஸ் நிலையம் இருந்தது. பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமமடைந்தனர்.அதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்பேரில், 2.62 கோடி ரூபாயில் வணிக வளாகங்கள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, பயணிகளுக்கு குடிநீர், கழிவறை, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு ஓய்வறை வசதியுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனை, கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்தும் வைத்தார்.அதன்பின், பஸ்கள் உள்ளே வந்து செல்கின்றனரே தவிர, வேறு எந்த வசதிகளும் பயன்பாட்டிற்கு வரவில்லை. வணிக வளாகங்கள், கழிவறைகள் ஏலமிடப்படாமல் பஸ் நிலையம் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. பஸ்களுக்கு மட்டும் நுழைவுச் சீட்டு பெறப்படுகிறது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், இரவில் மது அருந்துவது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.எனவே, வேப்பூர் பஸ் நிலையத்தில் கடைகள், கழிவறைகளை ஏலம் விட்டு, பயணிகள் பயன்படுத்த வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி