சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் உலக சிறப்பு பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. அதே போன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நடராஜர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதனால், நகரில் மக்கள் புழக்கம் எப்போதும் அதிகமாக உள்ளது.கோவிலை சுற்றி தேரோடும் பிரதான நான்கு வீதிகள் அமைந்துள்ளது. இங்கு, வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், விடுதிகள் அமைந்துள்ளது. சாலையோர கடைகளும் அதிகம் உள்ளது. இதனால், நகர வீதிகள் விஸ்தாரமாக இருந்தாலும் கூட, வாகன போக்குவரத்து, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது, வர்த்தக நிறுவனத்தினர் நடைபாதைய ஆக்கிரித்து கடை வைத்துள்ளது போன்ற காரணங்களால் சாலை குறுகி, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை எடுத்தும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை.இதுகுறித்து, தினமலர் நாளிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டு, போக்குவரத்து நெரிசலால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து, புதியதாக சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள லாமேக், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.நகரில் போலீஸ் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்ட அவர், சாலையோர ஆக்கிரப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இடையூறாக சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள், போக்குவரத்து வீதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.அப்போது டி.எஸ்.பி., கூறுகையில், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகங்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது.இதனால் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே, சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், கோவில் நுழைவு வாயில் அமைந்துள்ள கீழ வீதியில் கோவிலுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. ஒரு வழிப்பாதையாக இருந்தும், பயனில்லை. எனவே, கோவிலுக்கு வருவோரின் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த வடக்கு வீதியில் வாகனங்களை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.நகரில் போக்குவரத்து சீரமைக்க, கூடுதல் போலீசார் நியமிக்கவும் எஸ்.பி.,யிடம் கேட்டுள்ளோம். எனவே, விரைவில் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என, தெரிவித்தார்.