| ADDED : ஆக 05, 2024 12:12 AM
கடலுார் மாவட்டத்தில், கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும். 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மனிதர்களை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகில் உள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் தனி அறையுடன் கூடியநுாலகங்கள் உள்ளது. இந்நுாலகங்களில் கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு, கவிதை, சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்களின் வரலாறு, மருத்துவம், பொது அறிவு என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளது. பள்ளி நுாலகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களில் இருந்து புதிய புத்தகங்கள் வாங்கப்படுவது வழக்கம். மாணவ, மாணவிகள் நுாலக புத்தங்களை படித்து பயன்பெற்று வந்தனர்.நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்க குறிப்பிட்ட தொகை அரசின் மானியத் தொகையில் இருந்து பெறப்படும். அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒரு முறை நுாலக பாட வேளைகளை கட்டாயம் நடத்த வேண்டும். நுாலக பாட வேளைகளில், மாணவர்கள் புத்தகங்களை படிப்பதுடன், வீட்டிற்கு எடுத்துச் சென்று, படிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நுாலகங்களில் புதிய புத்தகங்கள் இல்லாததால் நுாலக பாடவேளை என்பது சரியாக நடக்கவில்லை. ஆசிரியர்களும் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவர்களின் விவரங்களை 'எமிஸ்'இணையளத்தில் பெயரளவில் மட்டுமே பதிவேற்றம் செய்கின்றனர்.பழைய புத்தகங்களையே மீண்டும் மீண்டும் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தற்போதைய உலக நடப்பு தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதனால் மாணவர்கள் மத்தியில் புத்தகம் வாசிப்பதன் மீதான ஆர்வமும் குறைந்து வருகிறது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள்புதிய புத்தகங்களை கொள்முல் செய்து,மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கல்வியறிவைமேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.