கடலுாருக்கு முதல்வர் வருகை; சில்வர் பீச் சாலையில் கடைகள் மூடல்
கடலுார்; கடலுாரில் நேற்று முதல்வர் பங்கேற்ற விழாவிற்காக, சில்வர் பீச் சாலையில் கடைகள் மூடப்பட்டன.கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், நேற்று அரசு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், பாரதி சாலையில் இருந்து சில்வர் பீச் சாலை வழியாக விழா அரங்கத்திற்கு வந்தார். இதற்காக, சில்வர் பீச் சாலை துவங்கும் இடத்தில் இருந்து, விழா அரங்கம் வரை சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும், பாதுகாப்பு நடவடிக்கைகாகவும் கடைகள் மூடப்பட்டன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சில்வர் பீச் சாலை, நேற்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும், முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, பீச் சாலையில் பிரம்மாண்ட ஆர்ச், விழா அரங்கத்திற்கு நுழையும் இடத்தில் காய்கறி பழங்களால் ஆர்ச் மற்றும் இருபுறங்களிலும் 100 மீட்டர் துாரத்திற்கு வாழை மரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது.