உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரி வசூலில் மாநகராட்சி அதிகாரிகள்... கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி புகார்

வரி வசூலில் மாநகராட்சி அதிகாரிகள்... கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி புகார்

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள், வீடு முன்பு பள்ளம் தோண்டுவது, குப்பைகளை கொட்டுவது என, அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என, கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.கடலுார் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் அனு, துணைமேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை துவக்கி வைத்து மேயர் பேசுகையில், மாநகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது. அதிக பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்து வருவதால் பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் வரி, வாடகை அதிகளவில் இருப்பதாகவும் குறைக்க வேண்டும் என்றும், வணிக சங்கங்கள், வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, மாநகராட்சியில் வரி, வாடகை தொடர்பாக மறுபரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து, கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:சக்திவேல் (பா.ஜ.,) : எனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. ஆனால் அருகில் உள்ள வார்டில் அனைத்து பணிகளும் நடக்கிறது. எதற்காக மாநகராட்சி கூட்டம் நடக்கிறது என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.சங்கீதா (தி.மு.க.,) : மேயருக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள். உங்கள் வார்டுக்கு என்ன தேவை என்பதை மட்டும் பேசுங்கள், தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றார்.இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், நீங்கள் மேயருக்கு ஜால்ரா அடிக்காதீர்கள் என கூறியதால் இரு கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திடீரென வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு சக்திவேல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.கீதா குணசேகரன் (தி.மு.க.,) : எனது வார்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்படுகிறது. இதனை மாடுகள் வந்து சாப்பிடாத வகையில், ஒதுக்குபுறமாக தனி இடம் தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும்.தமிழரசன் (தி.மு.க.,) : கவுன்சிலர்கள் பேசும்போது, துணைமேயர் கருத்து தெரிவிக்க வேண்டாம். அவர் வேண்டுமானால் தனியாக பேசட்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட துணை மேயர் தாமரைச்செல்வன், நான் எதற்காக அமைதியாக இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் பேசும்போது, எனது கருத்தை தெரிவிக்கலாம். அதற்கு உரிமை உள்ளது என்றார்.நடராஜன் (தி.மு.க.,) : கடலுார் மாநகராட்சியில் வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டுவது, குப்பைகளை கொட்டுவது, படிக்கெட்டுகளை இடிப்பது போன்ற அடாவடியான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தவிர்க்க வேண்டும்.இதே கருத்தை வலியுறுத்தி சரவணன் (பா.ம.க., ) பேசுகையில், வரிவசூலில் அதிகாரிகள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். பணம் வைத்துள்ளவர்களுக்கு வரி குறைவாகவும், பணம் இல்லாதவர்களுக்கு வரி அதிகமாகவும் போட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் காரசாரமாக நடந்ததால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, போலீசார் வரவழைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ