| ADDED : ஜூலை 13, 2024 12:51 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தகுதி மதிப்பெண்கள் குறைவாக மதிப்பிட்டதை கண்டித்து, முன்னாள் மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் காலை, மாலை வேளைகளில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சுற்றியுள்ள அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார் மாவட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.கடந்த கல்வியாண்டில் பி.காம்., முடித்த ஒரு மாணவி உட்பட 8 முன்னாள் மாணவர்கள், நேற்று மதியம் 12:00 மணியளவில், கல்லுாரி வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தனித்தகுதி மதிப்பெண் 25ல், குறிப்பிட்ட எங்களுக்கு மட்டும் குறைவாக மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரிக்கு சரியாக வராத மாணவர்களுக்கு அதிகமாக போடப்பட்டுள்ளது. துறைத் தலைவர் மீதான அதிருப்தி காரணமாக கல்லுாரி நாட்களில் நாங்கள் குறைகள் கூறி வந்தோம். அதனால், எங்களுக்கு தகுதி மதிப்பெண்ணை குறைத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.அவர்களிடம், பல்கலைக்கழக சான்றுகளை சரிபார்த்து, தகுதிக்கேற்ப மதிப்பெண் வழங்கப்படும் என கல்லுாரி முதல்வர் உறுதியளித்ததையேற்று, பிற்பகல் 1:30 மணியளவில் முன்னாள் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.