| ADDED : ஜூன் 29, 2024 06:11 AM
வானூர் : கிளியனூரில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் அடுத்த கிளியனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் அண்ணாமலை, 55; குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது கூரை வீட்டில் அதே பகுதியை சேர்ந்த அமாவாசை மகன் கோவிலிங்கம், வாடகைக்கு உள்ளார்.நேற்று இரவு 7;30 மணிக்கு, கோவிலிங்கம் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டின் கூரை தீ பிடித்து எரிந்தது. வீட்டிற்குள் இருந்த கோவிலிங்கம், அவரது மனைவி சாரதா உள்ளிட்ட நால்வரும் வெளியே ஓடி வந்தனர். சற்று நேரத்தில் வீட்டினுல் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால், தீ மளமளவென பரவி பக்கத்தில் வசிக்கும் கோபி, 40; வீட்டிற்கு தீ பரவியது.தகவலறிந்த வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் இரு வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.