புவனகிரியில் தீயணைப்பு நிலையம் ஊழல் எதிர்ப்பு இயக்கம்
புவனகிரி: புவனகிரியில் சுற்றுபகுதி கிராம மக்கள் நலன் கருதி, தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அப்பகுதியினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன், முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:புவுனகிரி வளர்ந்து வரும் நகரமாகவும், பேரூராட்சி, ஒன்றியம், தாலுகா மற்றும் சட்டசபை தொகுதியின் தலைமை யிடமாகவும், விவசாயமே முக்கியத் தொழிலாக, முற்றிலும் கிராமங்களான இங்கு, குடிசை வீடுகள் நிறைந்துள்ளது. இப்பகுதியில் திடீரென தீ விபத்தில் மீட்பு பணிக்கு பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு ஒரு மணிநேரம் கால விரயம் ஏற்படுவதால், பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் தேதி புவனகிரி ஆட்டுத்தொட்டித் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானதுடன், ஒரு பெண் குழந்தை தீயில் கருகி பலியானது. பலர் காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த கோர விபத்தில் இருந்து புவனகிரி மையப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே வளர்ந்து வரும் தாலுகா, நகரமான புவனகிரி மையப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.