கடலுார் மாவட்ட தி.மு.க., வில், இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நான்கு மாவட்டமாக பிரிக்க, கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தமிழகத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க., வில், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மற்றும் மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளதால், கட்சியை பலப்படுத்தவும், அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகளை உள்ளடக்கி, கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கி, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் செயல்படுகிறார்.தற்போது, கடலுார் மாவட்டத்தை நான்காக பிரித்து, கடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், விருத்தாசலம், திட்டக்குடி இரு தொகுதிகளை உள்ளடக்கி மற்றொரு மாவட்ட செயலாளர், அதே போன்று நெய்வேலி, பண்ருட்டிக்கு தனியாகவும், சிதம்பரம், புவனகிரி தொகுதிகளுக்க தனியாகவும் என, மாவட்டத்தில் 4 செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.புதியதாக பிரிக்கப்பட உள்ள சிதம்பரம், புவனகிரி இரு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் பெயரும், நெய்வேலி, பண்ருட்டி தொகுதியை ஒருங்கிணைத்து சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.