| ADDED : ஜூலை 15, 2024 11:58 PM
கடலுார்: என்.எல்.சி., நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் தலைமையில் கொடுத்துள்ள மனு:கடலுார் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி., பொதுத்துறை நிறுவனம், ஆண்டிற்கு சராசரியாக 2,882 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் இதனை நம்பியுள்ளனர். மத்திய அரசின் தனியார்மயமாக்க திட்டத்தை வேகமாக என்.எல்.சி.,யில் நிறைவேற்றி வருகிறது.நெய்வேலி 2வது சுரங்கத்தில் சோலார் மின் உற்பத்தி பணியை அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி., இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி., உயர்மட்ட அதிகாரிகள், என்.எல்.சி.,க்கு சொந்தமான அசையா, அசையும் சொத்துக்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இப்பணி எதற்கு நடக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சொத்தை கார்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்து பொதுத்துறையை சூறையாட தமிழக அரசு அனுமதிக்கூடாது. நெய்வேலியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொ.மு.ச., இதற்கு எதுவும் எதிர்ப்பு காட்டாமல் தி.மு.க., அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.எனவே, என்.எல்.சி., நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.