மாதம் ரூ.13 கோடி லாஸ் டாஸ்மாக் நிர்வாகம் புலம்பல்
மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயங்கி வருகிறது. இந்நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட முக்கிய நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் விற்பனை ஜோராக நடந்து வந்தது.இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அடிக்கடி புகார் சென்றது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவிற்பனை சரிந்தது. இந்த அதிரடி நடவடிக்கையால், கடலுார் மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு மாதம் ரூ.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். அதேநேரம் எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.