நகராட்சியின் வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்து வரி மற்றும் கடைகளுக்கான உரிம கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து ம.ம.க.மற்றும் வர்த்தக சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நிதிக்குழு மான்யத்தை பெற 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமென்பதால் அனைவரும் வரியை செலுத்த வேண்டுமென கமிஷனர் கிருஷ்ணராஜன் கேட்டு கொண்டார்.அதையும் மீறி நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் தொழில்புரிவோர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் கடைகளை மூடியிருந்தனர்.வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மணிவண்ணன் தி.மு.க., நகர செயலாளராக உள்ளதால் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அந்த சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை.அதன் தலைவர் நாசர்அலி மற்றும் அவரது சங்கத்தை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் கடையை திறந்திருந்தனர்.இரண்டு பிரிவினரும் கடைகளை திறக்கவும்,மூடவும் வலியுறுத்தியதால் பதட்டம் நிலவியது.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருதரப்பினரிடமும் அமைதியாக செல்ல வலியுறுத்தினார்.வரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.