உண்டியலுக்கு தீ வைத்த மாணவர்கள்
பெண்ணாடம்:கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது, கோவில் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணியளவில் அம்மன் சன்னதி முன் இருந்த 2 உண்டியலில் புகை மூட்டம் வருவதைக்கண்டு பக்தர்கள் கூச்சலிட்டனர். கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.போலீசார் கோவில் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில், தரிசனம் செய்ய வந்த மாணவர்கள் சிலர், சில்வர் உண்டியல், இரும்பு பெட்டி போன்ற உண்டியல் அருகே சென்று பேப்பரில் தீயை கொளுத்தி உண்டியலுக்குள் போட்டு விட்டு, அங்கேயே கும்மாளம் போட்டு மகிழ்ந்தது தெரிந்தது.இதுகுறித்து, கடலுார் அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுருத்தலின்பேரில், இன்று உண்டியல் திறக்கப்பட உள்ளது. அதன்பிறகே காணிக்கை எவ்வளவு சேதமானது என்பது தெரிய வரும்.