ரூ.16.2 கோடியில் பழைய கலெக்டர் அலுவலக கட்டடம் புனரமைக்க ஆய்வு
கடலுார்: கடலுாரில் ரூ. 16.2 கோடியில், பழமையான பழைய கலெக்டர் அலுவலக கட்டடம் புனரமைப்பது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். கடலுார் மஞ்சக்குப்பத்தில், 1897ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில கட்டப்பட்ட கட்டடத்தில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகம், தென்பெண்ணை ஆறு அருகே புதிய கட்டடத்திற்கு மாறியதால், பழமையான கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தது. இதனை தொல்லியல் துறை மூலம் சீரமைக்கும் பணிக்கு அரசு ரூ.16.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில், சீரமைப்பு பணி மேற்கொள்வது குறித்து, பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தை கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் அனு, தொல்லியல் துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர் திவ்யபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறுகையில், பழைய கலெக்டர் அலுவலகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இதனை புனரமைக்க அரசு ரூ.16.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கும். பழமையான கட்டடம் அதன் தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதில், அருங்காட்சியகத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள இடங்களில் மற்ற துறைகளுக்கான இடங்கள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.சீரமைப்பு பணிகள் அனைத்தும் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும். வெளிப்புற சுவர் பழுதுகள், செங்கல் சேதம், உட்புற சுவற்றில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், சேதமடைந்த பூச்சுகள், தரை சேதம் பழமை மாறாமல் சரி செய்யப்படும். கட்டடத்தின் மெட்ராஸ் ரூபிங் மாடலில் உள்ள மேற்கூரைகள் முழுமையாக அகற்றப்பட்டு புதிய கூரை அமைக்கப்படும். கதவு, ஜன்னல்கள் போன்றவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கட்டடத்தில் பழுதடைந்த மின் இணைப்புகள் முழுவதும் சரி செய்தல் போன்ற அனைத்து சீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.