பா.ஜ., மறியலில் தள்ளுமுள்ளு கடலுாரில் திடீர் பரபரப்பு
கடலுார் : கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மற்றும போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம் லால்பேட்டையில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி உருவ படம் எரிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், மோடியின் படத்தை எரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில், பா.ஜ.,வினர் கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போராட்டம் நடந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை போலீசார் தடுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எஸ்.பி., ஜெயக்குமார் விரைந்து சென்று, பா.ஜ.,வினருடன் பேச்சு நடத்தினார். அப்போது, வாலிபர் ஒருவர், மனித நேய மக்கள் கட்சி தலைவரின் உருவ பொம்மையுடன் மறியல் இடத்திற்கு ஓடிவந்தார். போலீசார், உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதேபோன்று காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையிலான 75 பேரை போலீசார் கைது செய்தனர்.