| ADDED : மே 24, 2024 05:35 AM
கடலுார்: கடலுார் அருகே வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை தாக்கிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.விழுப்புரம்-நாகப்பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உடலப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு, கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு பொருட்களை நேற்று முன்தினம் இரவு 4 மர்ம நபர்கள் திருடமுயன்றனர்.இதனையறிந்த தொழிலாளர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசீஸ் சுக்கிலா, 26; உத்திரபிரதேசம் பிஷ்னோசிங், 21; விழுப்புரம் முருகன், 26; ஆகியோர் இரும்பு பொருட்களை திருட வந்த கும்பலை தடுத்துநிறுத்தினர்.ஆத்திரமடைந்த மர்ம கும்பல், தொழிலாளர்களை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியது. இதில், பலத்த காயமடைந்த தொழிலாளர்கள் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.