| ADDED : ஆக 18, 2024 11:33 PM
கடலுார்: கடலுாரில் விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்துவருகின்றது.நாடு முழுவதும் வரும் செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.அன்று, கிராமங்கள் மற்றும் நகரங்களில் மெகா சைஸ் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வர். இதற்காக, கடலுார் சாவடி, வண்டிப்பாளையம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.இதில், மூன்று தலை விநாயகர், சிவன் பார்வதியுடன் இருக்கும் விநாயகர், ஐந்துமுக சிங்கவிநாயகர், நந்தி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சிலைகளின் உயரம் மற்றும் கலைநயத்திற்கு ஏற்ப 500 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.மேலும், காகித கூழ், கிழங்கு மாவு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஆட்களின் கூலி உயர்வு காரணமாக சிலைகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.