| ADDED : ஏப் 20, 2024 06:03 AM
சிதம்பரம், : சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியிலில் இருந்து விடுபட்டுள்ளது. இதனால் வாக்கு மையத்திற்கு சென்ற வாக்காளர்கள் பலர் மீண்டும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சிதம்பரம் அடுத்துள்ள மணலுார், எம்.ஆர்.வி., நகர், லால்புரம் பகுதியை சேர்ந்த 20 பேர், பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தது.அதே போல், சிதம்பரம் நகரப்பகுதியிலும், பல வார்டுகளில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. இதனால் முதியவர், பெண்கள் என பலர் வாக்குச்சாவடி மையம் வந்து, வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றனர். சிதம்பரம் அடுத்துள்ள சிலம்பிமங்களம், ஆத்துமேடு, சாமியார்பேட்டை பகுதிகளில் தலா 15 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. மேலும் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வாண்டையாம்பள்ளம் பகுதியில், சுமார், 120 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இதனால் இவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.