தி.மு.க., சேர்மனை கண்டித்து பெண் கவுன்சிலர்கள் தர்ணா
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் தி.மு.க., சேர்மனை கண்டித்து, அ.தி.மு., தே.மு.தி.க., பெண் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மங்கலம்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. அப்போது, நுாறு நாட்களாக மன்ற கூட்டத்தை நடத்தாததால் சேர்மனை கண்டித்து, மன்ற வளாகத்தில் கவுன்சிலர்கள் அ.தி.மு.க., கோமதி, தே.மு.தி.க., உமா, சுயேச்சைகள் தனலட்சுமி, கிருஷ்ணவேணி ஆகியோர், காலை 10:30 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர். மதியம் 1 மணிக்கு மேலாகியும் தர்ணாவில் ஈடுபட்டவர்களை சேர்மன் சம்சாத் பேகம், செயல் அலுவலர் மயில்வாகனம் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் திடீரென விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, செயல் அலுவலர் மயில்வாகனம் நேரில் வந்து, கவுன்சிலர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.பெண் கவுன்சிலர்களின் அதிரடி போராட்டத்தால், மங்கலம்பேட்டையில் பரபரப்பு நிலவியது.