திட்டக்குடியில் உடற்பயிற்சி கூடம் இளைஞர்கள் வலியுறுத்தல்
திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சியில் சுமார் 40ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்கு இங்கு வசதிகள் இல்லை.உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சியின் நன்மைகள் குறித்து இளைஞர்களிடையே தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், இப்பகுதியில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலரும் தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி பெறுகின்றனர். மாதம் தோறும் பணம் செலுத்த வசதி இல்லாத குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், ஆர்வம் இருந்தும் பயிற்சி பெற முடிவதில்லை.ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேரூராட்சியாக இருந்த திட்டக்குடியில் அதுபோல எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், திட்டக்குடியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.