காட்டுமன்னார்கோவில் பகுதியில் நீரில் மூழ்கி 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் துார் வாரப்படாததால், சம்பா பயிரிட்ட விளை நிலங்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா கடைமடை பகுதியில் பல்வேறு வாய்க்கால்கள் துார் வாரப்படாததால், சாதாரண மழைக்கே நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பல்வேறு பகுதிகளில், வயல்களில் தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளே களத்தில் இறங்கி வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனர். காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், வடவாறு, வடக்கு ராஜன் மற்றும் வீராணம் ஏரி மூலம் பாசனம் பெற்று வருகிறது. தற்போது சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவீரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு வாயிலாகவும், ஆழ்குழாய் கிணறு வைத்திருப்பவர்கள் நாற்று விட்டு நடவு பணியை மேற்கொண்டு சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழை காரணமாக, நெல் நடவு வயல்களில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்களை பொதுப்பணி துறையினரால் துார் வாராமல் உள்ளது. பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை அகற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வயல்களில் இருந்து மழை நீர் வடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினர். பொதுப்பணி துறையினர் முறையாக வாய்க்காலை துார்வாராததால் காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஆச்சாள்புரம், கஞ்சங்கொல்லை குச்சிபாளையம், புத்துார், ஷண்டன், ஈச்சம்பூண்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்தள்ளது.