உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசிடம் தப்ப முயன்ற 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

போலீசிடம் தப்ப முயன்ற 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

கடலுார்: கடலுாரில் கொலை மிரட்டல் வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற 2 ரவுடிகள் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடலுார், வண்டிப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ், 45; வசந்தராயன்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 35; வெல்டிங் தொழிலாளிகளான இருவரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து, பைக்கில் வீட்டிற்கு சென்றனர். திருப்பாதிரிப்புலியூர் ஆரிய வைசிய மண்டபம் அருகில் வந்தபோது பின்னால் வந்த கம்மியம்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கவுசிக்,19; குப்புசாமி மகன் ஜீவானந்தம் இருவரும், துரைராஜை உரசியபடி சென்றனர். இதனை தட்டிக்கேட்ட துரைராஜை மறித்து கவுசிக், ஜீவானந்தம் ஆகியோர் கத்தியால் தலையில் வெட்டினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றனர். காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கவுசிக், ஜீவானந்தம் இருவரை தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் திருவந்திபுரம் மலையில் உள்ள குடிநீர் டேங்கில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் குடிநீர் டேங்க் மீது இருந்து கீழே குதித்து இருவரும் தப்பியோட முயன்றனர். அப்போது, தடுமாறி விழுந்ததில், கவுசிக்கிற்கு கால், ஜீவானந்தமனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜீவானந்தம் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனில் ரவடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. இவர் மீது ஒரு கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட மொத்தம் 5 வழக்குகளும், கவுசிக் மீது கடலுார் புதுநகர், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் 2 கஞ்சா வழக்கு, 2 வழிப்பறி, 2 அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ