உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2.19 லட்சம் விலையில்லா பாட புத்தக பயனாளர்கள்... மாவட்டத்தில் 1,716 பள்ளிகளில் வழங்கல்

2.19 லட்சம் விலையில்லா பாட புத்தக பயனாளர்கள்... மாவட்டத்தில் 1,716 பள்ளிகளில் வழங்கல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 1,716 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தகப் பை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதன்படி 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா உபகரணங்கள் வழங்கி வருகிறது.'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறது. மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 293 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,32,905 மாணவ, மாணவிகளும், தொடக்கக் கல்வித்துறை நிர்வாக அலகில் செயல்படும் 1,423 அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 86,538 மாணவ, மாணவிகளும் என, மொத்தம் 2,19,443 பேருக்கு கல்வி உபகரணங்கள் மூலம் பயனடைவார்கள். கடந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவும் 'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற ஒரு புதிய முன்னெடுப்பை செயல்படுத்தியதன் மூலம் 10ம் வகுப்பில் மாநில அளவில் 20வது இடத்திற்கும், பிளஸ் 2 வகுப்பில் மாநில அளவில் கடலுார் மாவட்டம் 10ம் இடத்திற்கும் முன்னேறியது. இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் நடந்து கல்வி ஆண்டிலும் 'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற திட்டத்தின் மூலமாக மாணவர்களின் தேர்ச்சி விகிதததை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்கள் கடின உழைப்புடன் இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். கடினமாக நினைக்கும் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து தேர்ச்சி பெற வேண்டும். பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி கலை படைப்புகள், விளையாட்டு என பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

பாக்ஸ்

கலெக்டர் துவக்கி வைப்பு கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1,612 மாணவிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கமிஷனர் அனு, முதன்மைக்கல்வி அலுவலர் எல்லப்பன், தலைமை ஆசிரியை இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ