உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 2,500 மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் தகவல்
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ஆண்டார்முள்ளிபள்ளம் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் பன்னீர்செல்வம், முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், 'இப்பகுதியில் கடந்த, 4 ஆண்டுகளில் பயணியர் நிழற்குடை, சாலை பணிகள், தெரு மின்விளக்குகள் அமைத்தல், மயான பாதை அமைத்தல் என, 102 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 10 வீடுகள் பழுது நீக்கம் செய்யப்பட்டது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன. இதுவரை, 33 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பம் அளித்த மகளிர் விரைவில் உதவித்தொகை பெறலாம். கடலுார் மாவட்டத்தில் மொத்தம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 378 சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. இதுவரை பெறப்பட்ட மனுக்களில் 2, 500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என்றார். விழாவில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., அபிநயா உட்பட பலர் பங்கேற்றனர்.