தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே தனியார் நிலத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்,50; இவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீரன் கோவிலில், பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இதற்கு, பழனிவேல் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.இதுசம்மந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பண்ருட்டி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தற்போது உள்ளதுபோல் சாமி வழிபாடு நடத்தவும், கோவில் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி, வீரசெல்வம், முருகானந்தம், பாலமுருகன், நாகப்பன் உள்ளிட்ட சிலர் அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக நிலத்தில் இருந்த முந்திரி மரங்களை வெட்டியும், பைப் லைன்களை உடைத்தனர். தட்டிகேட்ட பழனிவேலை மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து பழனிவேல் நடுவீரப்பட்டு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சுந்தரமூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து, வீரசெல்வம், 57; முருகானந்தம், 41; பாலமுருகன், 47; நாகப்பன், 65; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கார் நகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நடுவீரப்பட்டு போலீஸ் நிலையம் எதிரில் திரண்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.