வலையில் சிக்கிய 80 டன் பாறை மீன்கள் உயிருடன் கடலில் விட்ட மீனவர்கள்
கடலுார்: கடலுார் மீனவர்கள் வலையில் சிக்கிய, 80 டன் பாறை மீன்களை, உயிருடன் கடலில் விட்டனர்.கடலுார் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். பெரிய வகை படகுகளில் 50 தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள் ஆகியவற்றுடன் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இவர்கள் ஐந்து முதல் பத்து நாட்கள் வரை கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீனவர்களின் வலைகளில் பெரிய அளவிலான பாறை மீன்கள் அதிக அளவில் சிக்குகின்றன. பெரிய அளவிலான விசைப்படகுகளில் குறிப்பிட்ட அளவு மீன்கள் மட்டுமே ஏற்ற முடியும்.இந்நிலையில் நேற்று முன்தினம் தேவனாம்பட்டினத்தில் இருந்து சென்ற மீனவர்கள் படகுகளில் ஏராளமான பாறை மீன்கள் சிக்கின.அதிகளவு மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் அந்த மீன்களை படகுகளில் ஏற்ற முடியாமல் உயிருடன் கடலில் விட்டுவிட்டனர். அதிக எடை ஏற்றினால் படகிற்கு பாதுகாப்பு இல்லை என்பதால், 80 டன் மீன்களை உயிருடன் கடலிலேயே விட்டுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.