உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது

கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது

கடலுார் : கடலுாரில் கஞ்சா விற்ற 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கடலுார், அடுத்த எம்.புதுாரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., ரூபன்குமார், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், கணபதி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை எம்.புதுாரில் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தை சுற்றி வளைத்து, அங்கிருந்த 9 பேரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் எம்.புதுார் புதுநகர் ரங்கசாமி மகன் சிவாஜி (எ) சிவாஜிகணேசன்,19; சுரேஷ் மகன் தோல் (எ) சூர்யபிரதாப்,21; சென்னை மேற்கு முகப்பேர் வேலு மகன் சந்துரு (எ) சந்திரசேகர்,29; பண்ருட்டி கொக்குப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு வீரபத்திரன் மகன் ஆனந்த்,22; கடலுார் கோண்டூர் பெரியத் தெரு லட்சுமணன் மகன் சூர்யா (எ) விஜய்,21; திருவந்திபுரம் புதுநகர் சிவா மகன் எலி (எ) விக்னேஷ்,22; கலியபெருமாள் மகன் அரி (எ) அரவிந்த் 23; அரிசிபெரியாங்குப்பம் நீலப்பன் மகன் குண்டுபாலா (எ) ஆகாஷ்,19; கடலுார் வண்டிப்பாளையம் ரோடு, சிவா நகர் மகாதேவன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன்,20; என்பதும், இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்து வருவது தெரிய வந்தது.அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து 9 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 23 கிலோ கஞ்சா, அவர்கள் பயன்படுத்திய 7 மொபைல் போன்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து 9 பேரையும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

எங்கிருந்து வருகிறது?

எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், கைதாகியுள்ள 9 பேரும் கூட்டாக சேர்ந்து, சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மூலம், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து, லாபத்தை பங்கிட்டு கொள்கின்றனர்.கடந்த வாரம் சிவாஜி, சந்திரசேகர் ஆகியோர் ஆந்திரா மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டம், ஜோதாவரம் அடுத்த நரசய்யாபேட்டைக்கு சென்று அங்கு கஞ்சா வியாபாரி ஈஸ்வரன் மகன் பிரதீப் என்பவரிடம் 25 கிலோ கஞ்சா வாங்கி வந்துள்ளனர். பிரதீப் சொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த கீரப்பட்டி. இவர், ஆந்திராவில் தங்கி, தமிழத்தில் கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கஞ்சா அனுப்பி வைப்பது தெரிய வந்துள்ளது. கஞ்சா 'நெட் ஒர்க்' குறித்து தொடர்ந்த விசாரித்து வருகிறோம் என்றார்.

வசிப்பிடம் வேறு

எம்.புதுார் சிவாஜி (எ) சிவாஜி கணேசன் தற்போது கடலுார், ஆனைக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள முருகன் கோவில் தெருவிலும், சென்னை முகப்பேர் சந்துரு (எ) சந்திரசேகர் திருச்சி துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டையில் வசித்து வருகின்றனர்.

நிலுவை வழக்குகள்

சிவாஜி மீது கஞ்சா, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளும், சந்துரு மீது கஞ்சா, கொலை முயற்சி என மூன்று வழக்குகள் உள்ளன. ஆனந்த் மீது கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்குகளும், சூர்யா மீது கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் கொலை முயற்சி என 5 வழக்குகள் உள்ளன. எலி (எ) விக்னேஷ் மீது கஞ்சா, ரவுடிசம், 'போக்சோ' வழக்குகளும், அரி (எ) அரவிந்த் மீது கஞ்சா உள்ளிட்ட 5 வழக்குகளும், தோல் (எ) சூர்யபிரதாப் மீது கஞ்சா, கள்ளச்சாராயம், ரவுடிசம் என 11 வழக்குகளும், குண்டுபாலா மீது ஒரு கஞ்சா வழக்கும், கார்த்தி மீது ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை